உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்

கவுதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப் 5-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கான தியேட்டர் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் ‘என்னை அறிந்தால்’, இதுவரை அஜித் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகும் படமாக வரவிருக்கிறது. 
இப்படத்தை அமெரிக்காவில் மட்டும் 95 திரையரங்குகளில் திரையிட உள்ளனர். ஏற்கெனவே அஜித் நடிப்பில் வெளிவந்த ‘ஆரம்பம்’ படம் அங்கு 78 திரையரங்குகளில் திரையிடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ‘என்னை அறிந்தால்’ தகர்த்தெறிந்துள்ளது. 
அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலக அளவில் சுமார் 1000 திரையரங்குகளிலும் ‘என்னை அறிந்தால்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுவரை வெளிவந்த அஜித் படங்களிலேயே இப்படத்திற்குத்தான் மிகப்பெரிய ஓபனிங் உள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 
கவுதம் மேனன் தன்னுடைய படங்களில் ரசிகர்களை கவரும் வகையில் ஏதாவது ஒரு ஆச்சர்யத்தை வைத்திருப்பார். அந்த ஆச்சர்யம் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், படம் வரும் வரை அனைவரும் பொறுமை காத்துதான் ஆகவேண்டும். 
இதற்கிடையில், சமூக இணையதளங்களில் ‘என்னை அறிந்தால்’ படத்தை பற்றி ஏகப்பட்ட பாசிட்டிவ் கமெண்டுகளை ரசிகர்கள் அளித்த வண்ணம் இருக்கின்றனர். படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தல அஜித்தை 3 மணி நேரம் திரையில் பார்த்தாலே போதும் என்கிற அளவுக்கு இப்போதே ‘என்னை அறிந்தால்’ படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment